Wednesday, February 4, 2026

தெய்யம், கேரளா

 “தெய்யம்” கேரளத்தின் ஒரு புனிதக் கலை மற்றும் பண்பாடு. நாட்டுப்புற வழிபாட்டு மரபுகளில் ஒன்றான தெய்யம், கேரள மாநிலத்தின் வட பகுதிகளான கண்ணூர், காசர்கோடு மற்றும் கோழிக்கோடு ஆகிய இடங்களில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இப்பகுதி பழங்குடி மற்றும் கிராம மக்களிடம் காணப்படும் இறை வழிபாட்டு முறைகளில் தெய்யம் மிக முக்கியமானது. "தெய்வம்" என்ற சொல்லே "தெய்யம்" என மருவியதாகக் கருதப்படுகிறது.

​தெய்யத்தின் தத்துவம்

கோயிலின் கருவறையில் வீற்றிருக்கும் சக்தியானது, தெய்யம் வேடமிடும் கலைஞர்களிடம் இறங்கி, மக்களின் துயரங்களையும் வேண்டுதல்களையும் நேரடியாகக் கேட்டு ஆசி வழங்கும் ஒரு நிகழ்வே தெய்யமாகும். இது வெறும் ஆட்டமாக மட்டுமல்லாமல், அம்மக்களின் இறை நம்பிக்கை மற்றும் உயரிய கலைப் பண்பாடாகவும் போற்றப்படுகிறது.

​வரலாற்றுப் பின்னணி :

​பண்டைய காலத்தில் தோன்றிய தெய்யம், இன்று கேரளத்தின் அனைத்து கிராமக் கோயில்களிலும் பரவலாக நிகழ்த்தப்படுகிறது. தொடக்கத்தில், மரங்கள் சூழ்ந்த அடர்ந்த காடுகளுக்கு நடுவே 'காவு' எனப்படும் பொது இடங்களில் இது நடத்தப்பட்டது. இன்றும் சில இடங்களில் விளக்கொளியில் காடுகளுக்கு நடுவே இது நிகழ்ந்தாலும், பெரும்பாலான இடங்களில் கோயிலைச் சுற்றியே நடத்தப்படுகிறது. ​இதில் பங்குபெறும் கலைஞர்கள் மலையன் மற்றும் வண்ணான் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தலைமுறை தலைமுறையாக இக்கலையைத் தவம் போல் செய்து வருகிறார்கள். பல குடும்பங்களுக்குத் தெய்யமே குலதெய்வமாகவும், ஊரின் கிராம தேவதையாகவும் விளங்குகிறது. ஆண்டு விழாவாகவோ அல்லது வேண்டுதலுக்கான காணிக்கையாகவோ சுமார் 400-க்கும் மேற்பட்ட வெவ்வேறு தெய்யக் கோலங்கள் நிகழ்த்தப்படுகின்றன. எளிய கலைஞர்களைக் கடவுளாக ஏற்று அனைத்துத் தரப்பு மக்களும் வணங்கும் இந்த இறை சிந்தனை மிகவும் உயர்வானதாகக் கருதப்படுகிறது.

​ஒப்பனையும் தயாரிப்பும்

​தெய்யம் நிகழ்த்தும் கலைஞர்கள், சடங்கு நடப்பதற்கு முந்தைய வாரங்களில் விரதமிருந்து, துறவு நிலையைப் போன்ற ஒரு தூய்மையான வாழ்க்கை முறையை மேற்கொள்கின்றனர். இக்கலையில் முக ஒப்பனைக்கான வண்ணங்கள் இயற்கைப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

​மஞ்சள்: மஞ்சள் பொடி.

வெள்ளை: அரிசி மாவு.

​சிவப்பு: சுண்ணாம்பு கலவை.

​கருப்பு: தேங்காய் எண்ணெயுடன் எரித்த நெல் உமி மற்றும் தேங்காய் மட்டையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. உடை பச்சைப் பனை ஓலைகளைக் கொண்டு நுட்பமான உடைகள் உருவாக்கப்படுகின்றன. கிரீடம், மார்புக் கவசம் மற்றும் அணிகலன்கள் அந்தந்த தெய்யக் கதாபாத்திரத்திற்கு ஏற்பத் தயார் செய்யப்படுகின்றன. இதற்கெனக் கோயிலின் ஓரத்தில் தனி அறை அல்லது கூடாரம் அமைக்கப்படும். முகம் முழுவதும் வண்ணங்கள் பூசி, கண்களுக்கு மையிட்டு, மிக நேர்த்தியான ஒப்பனை செய்யப்படுகிறது.

ஆட்டமும் அருளாசியும்

​பெண் தெய்வக் கதாபாத்திரங்களுக்கும் ஆண்களே வேடமிடுகின்றனர். சில தெய்யங்களின் கிரீடங்கள் 20 முதல் 30 அடி உயரம் வரை இருக்கும். இசை, மணம், மற்றும் நேர்த்தியான ஆடை அலங்காரங்களுடன் ஆடும் இந்தக் கலைஞர், ஒரு கட்டத்தில் தன்னிலை மறந்து ஆடுகிறார். இதுவே தெய்யாட்டம் என்றும், அந்த வேடம் தெய்யக் கோலம் என்றும் அழைக்கப்படுகிறது.

​மேள தாளங்களுடன் கலைஞர் கோயிலை வலம் வரும்போது, பாடல்கள் வழியாக அவர் படிப்படியாகத் தெய்வமாக மாறும் நிகழ்வு அரங்கேறுகிறது. தெய்வம் ஒரு மனித உடலில் தற்காலிகமாகப் புகுந்து வெளிப்படுவதாக மக்கள் நம்புகின்றனர். இதைக் காணும் பார்வையாளர்கள் பக்திப் பரவசமடைகின்றனர். சாதிப் பாகுபாடின்றி அனைவரும் தெய்யத்திடம் ஆசி பெறுகின்றனர். சில இடங்களில் கோழி பலியிடும் சடங்குகளும் நடைபெறுகின்றன.

முடிவுரை

​அறிவியல் வளர்ச்சிகளுக்கு மத்தியிலும், தெய்யம் மக்களின் வாழ்வில் பிரிக்க முடியாத கலாச்சாரப் பாரம்பரியமாகத் திகழ்கிறது. தெய்யம் பார்ப்பவர்களுக்கு முதலில் ஒரு அச்சத்தை உண்டாக்கினாலும், இறுதியில் அது பக்தியையும் அமைதியையுமே வழங்குகிறது. இதனை ஒரு சுற்றுலா நிகழ்வாகவோ அல்லது வெறும் வேடிக்கையாகவோ பார்க்காமல், அவர்களின் புனிதமான பண்பாட்டு விழுமியமாக மதிக்க வேண்டியது நம் கடமையாகும்.

1)கண்ணபுரம் பூமலகாவு கோயில் , கண்ணூர்





         கன்கோல் களரி பகவதி கோயில் 



                        
                      ஒப்பனை அலங்காரம்



நரசிம்மவதம்




Monday, January 12, 2026

பாறு கழுகுகளுடன் ஒரு நாள்

 "பாறு கழுகுகளுடன் ஒரு நாள் " என்ற நிகழ்வு கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி (செப்டம்பர் முதல் சனி )பாறு கழுகுகள் தினத்தன்று  நடைபெற்றது . தமிழக வனத்துறையும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மற்றும் அருளகமும் இணைந்து நடத்திய இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அமைந்தது . பாறு கழுகுகள் பற்றி எந்த ஒரு சிறு அறிமுகமும் இல்லாமல் கலந்து கொண்ட எனக்கு அங்கு வந்த சிறப்பு விருந்தினர்  திரு ரவீந்திரன் நடராஜன் , அருளகம் பாரதிதாசன் மற்றும் வன அலுவலர்கள் பாறுகள் பற்றிய நிறைய செய்திகளை பகிர்ந்தனர் . பாறு கழுகுகள் என்றால் பிணந்தின்னி கழுகுகள் என்று மட்டுமே அறிந்திருந்த எங்களுக்கு அவர்கள் கொடுத்த விளக்கங்களும் அவைகளால் காடுகளுக்கு ஏற்படும் நன்மைகளை பற்றியும் அவைகள் ஏன் வேகமாக அழிந்து வருகிறது என்பதையும் அறிந்து கொண்டோம் . காலை 7 மணிக்கு பவானிசாகர் அணையின் செக்போஸ்ட் அருகே இருந்து தொடங்கி  தெங்கு மராட்டா வனப்பகுதியின் உள்ளே எங்களை அழைத்துச் சென்று அங்கு பறந்து கொண்டிருந்த பாறுகழுகுகளை நேரில் காட்டியதுடன் அவற்றின் வகைகள் பற்றியும் அவற்றால் காடுகளுக்கு ஏற்படும் நன்மைகள் பற்றியும் விளக்கமாக கூறினர் . இந்நிகழ்ச்சியில் செவிக்கு மட்டும் உணவளிக்காமல் காலை 11 மணி அளவில் சுவையான சுண்டலும் சுக்கு டீயும் வழங்கியதுடன் நிறைவான மதிய உணவும் அளிக்கப்பட்டது . நிகழ்ச்சியின் இறுதியில் பாறு கழுகளை காப்போம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டோம்  .  நிகழ்வுக்கு சென்றதால் பாறு கழுகுகளை பற்றி நான் தெரிந்து கொண்டவையை கட்டுரையாக காண்போம் .

பண்டைய தமிழர்கள் இயற்கையுடன் ஒன்றிய வாழ்வினை இயல்பாக ஏற்று சிறப்பாக வாழ்ந்தனர் . வீரமும் , காதலும் , கொடையும் , நீதியும் மட்டுமின்றி சுற்றுச்சூழல் அமைப்பையும் போற்றி வாழ்ந்தனர் . நிலங்களை நான்கு வகையாக பிரித்து முல்லை மருத நிலத்தின் பண்புகள் மாறுவதை பாலை என்று வகைப்படுத்தி , ஐவகை நிலங்கள் ஆக்கினர் . ஐவகை நிலங்களுக்குரிய பறவைகள் விலங்குகள் மரங்கள் செடிகள் கொடிகள் என தனித்தனியே வகுத்தனர் . கபிலர் குறிஞ்சிப்பாட்டில் பட்டியலிட்ட 96 பூக்களைப் பற்றி நாம் அறிவோம் . இவை போல  பல விலங்குகள் பறவைகள் பற்றிய பல அறிவியல் உண்மையை சங்க பாடலில் இடம் பெற்றுள்ளன . இவற்றில் பிணந்தின்னும் கழுகுகள் பற்றி சங்க நூல்களில் கூறப்பட்டவை பற்றியும் தற்போது அவற்றின் நிலைமையையும்  இங்கு காண்போம் .

சங்க இலக்கியத்தில் போர் பற்றிய வர்ணனைகளில் தவறாமல் கழுகும் பருந்தும் இடம்பெற்றிருக்கின்றன . சங்க இலக்கியத்தில் 

 *பருந்து பசி தீர்க்கும் நற்போர்த்

   திருந்து வேல் நாகற் கூறினர் பலரே*

                                                    புற179 

பிணத்தை தின்று வாழும் பருந்திற்கு போர்க்களத்தில் நல்ல விருந்து கிடைக்கும் அல்லவா .  பருந்தின் பசியாருவதற்காகவே போர்கள் நடைபெற்றனவாம் . காலைக்கிழவன் நாகன் என்ற தலைவனை பருந்தின் பசி தீர்க்கும் நல்ல போரை செய்யும் என்று வடநெடுதத்தனார் பாடுகிறார்.

சங்க இலக்கியத்தில் இதுபோன்று பாறு கழுகுகளைப் போற்றி பல பாடல்கள் இடம் பெற்றுள்ளது .  இவ்வாறு போற்றி பாடப்பட்ட பல உயிரினங்களின்  தற்போதைய நிலை தான் என்ன ?  தற்போது உள்ள மனிதன் சுயநலத்துக்காக சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் செயல்களை அறிந்தும் அறியாமலும் செய்வதால் , பல உயிரினங்கள் அழியும் நிலைக்கு கொண்டு சென்றுள்ளான் .

இந்தியாவில் பல்வேறு வகை ஊனுண்ணும் பறவைகள் உள்ளன . வல்லூறுகள் , பருந்துகள் , பாறுகழுகுகள் (பிணந்தின்னி  ) ஆகியவை இவற்றில் அடங்கும் . வெளித்தோற்றத்தை வைத்து இவற்றை நாம் எளிதாக அடையாளம் காண முடியும் . மற்ற பறவைகள் போல இவற்றுக்கு தலையிலும் கழுத்திலும் சிறகுகள் இருக்காது . கண் மற்றும் மூக்கின் அபார சக்தியால் இரையை துல்லியமாக கண்டறியும் ஆற்றல் பெற்றது . வலிமையான அலகும் , குத்தி கிழிக்கும் கூர்மையான நகங்களுடன் காணப்பட்டாலும் இவைகள் பகிர்ந்து உண்ணும் குணமும் கூட்டமாக வாழும் பண்பும் கொண்டவை . உயரமான மரங்களிலும் (மருது மரம் ) செங்குத்தான பாறை முகடுகளிலும் குச்சிகளைக் கொண்டு கூடு கட்டும் இயல்புடையது . இவை சுமார் 40 ஆண்டுகள் வாழ்ந்தாலும் இது வருடத்திற்கு ஒரு முட்டையை இடும் , குஞ்சு  வளர்ந்து அது இனப்பெருக்கம் செய்ய நான்கிலிருந்து ஏழு வருடங்கள் ஆகும்.  ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டில் வாழும் பறவை அதே போல் ஒரு சமயத்தில் ஒரே ஒரு முட்டையையே இடும் அதை 60 நாட்கள் அடைகாக்கும் . முட்டையை அடைகாக்கும் போது ஆண் பெண் இரண்டும் மாறி மாறி அடைகாக்கும் . இப்பறவை மனிதனிடம் மிகவும் விலகியே வாழும் எனினும் இவை உணவுச்சங்கலிகளில் மிக முக்கியமானவை . இவற்றால் ஏற்படும் நன்மைகள் மற்றும் இவை இல்லாவிட்டால் என்னவாகும் என்பதை பற்றி காண்போம் .

*இயற்கை துப்புரவாளர்கள்* என்று போற்றப்படும் பாறு கழுகுகள் அதிகம் சிறகடிக்காமலே உயரமாக பறக்கும் ஆற்றலை பெற்றது . வானத்தில் வட்டமிட்டுவாறே எங்காவது பிணங்கள் இருக்கின்றனவா என்று நோட்டம் விட்டவாறு பறக்கும் இவை , சுமார் 7 கிலோமீட்டர் தொலைவு தூரம் வரை மேலிருந்து இரையை பார்க்கும் ஆற்றலே பெற்றது . இவை உயிரோடு உள்ள எவற்றையும் வேட்டையாடுவதோ உண்பதோ இல்லை  , பெரும்பாலும் அழுகத் தொடங்கிவிட்ட பிணங்களிலேயே உணவாக கொள்ளும்.  இறந்த விலங்குகளின் உடல்களில் இருக்கும் நுண்ணுயிர்கள் அனைத்தையும் இவை தின்று விடுவதால் காடுகளில் உள்ள மற்ற விலங்குகளுக்கு தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கிறது . இயற்கையாகவே அமைந்த நோய் எதிர்ப்பு சக்தியால் இவைகள் தொற்று நோயால் இறந்து கால்நடைகள் உண்டு ,  தொற்று மற்ற கால்நடைகளுக்கு பரவாமல் தடுக்கிறது . இறந்த கால்நடைகளை நான்கிலிருந்து 5 மணி நேரத்தில் முழுமையாக தின்று முடித்து விடும். இவை சாப்பிட்டவுடன் தன்னை சுத்தமாக வைத்துக் கொள்ள நன்கு குளிக்கும் . காட்டை தூய்மையாக வைத்துக்கொள்ள பேருதவியாக இருக்கும்  . இப்பாறுகழுகின் வகைகள் பற்றி காண்போம் .இந்தியாவில் ஒன்பது வகையாக பாறு கழுகுகள்  காணப்படுகின்றன . அவை 

மஞ்சள் முகப்பாறு ,செம்முகப் பாறு , வெண் முதுகு மாறு , கருங்கழுத்துப் பாறு , வெண் கால் பாறு ,வெண் தலை பாறு ,  இமாலயப்பாறு ,  ஊதா முகப்பாறு ,  தாடிப் பாறு . அவற்றில் தமிழகத்தில் நான்கு வகைகள் மட்டுமே பதியப்பட்டுள்ளன . அதிலும் மாயாறு , முதுமலை மற்றும் சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் மாறு கழுகுகளின் முக்கிய வாழ்விடங்கள் ஆகும். தமிழகத்தில் காணப்படும் மாறு கழுகுகள் பற்றி காண்போம் .

1)மஞ்சள் முகப்பாறு (Egyptian vulture) :

திருக்கழுக்குன்ற பாறு , நோண்டிக் கழுகு , கோடாங்கி கழுகு , மஞ்சள் திருடி என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது . இவற்றின் முகம் மற்றும் வளைந்த கூரிய அலகு மஞ்சள் நிறத்திலும் ,இறகுகள் அழுக்கடைந்த வெண்ணிற நிறத்திலும் காணப்படுகிறது . இவை தற்போது பேரழிவுக்கு ஆட்பட்டுள்ளது . உலக அளவில் இவற்றின் எண்ணிக்கை நிறைய இருப்பினும் தமிழகத்தில் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிலே உள்ளன . தமிழகத்தில் திருக்கழுக்குன்ற கோயிலில்  பல நூறு ஆண்டுகளாக இரண்டு கழுகுகள் வந்து பிரசாதத்தை உணவாக உண்டு போனதாக சொல்லப்பட்ட கழுகு மஞ்சள் முகப்பாறு ஆகும் .

2)செம்முகப்பாறு (Red headed vulture) : 

எருவை, ராஜாளி என்றும் அழைக்கப்படுகிறது . பாண்டிச்சேரி கழுகு என்ற சிறப்பு பெயரும் இதற்கு உண்டு. இதன் உடல் மற்றும் கழுத்துப்பகுதி செம்மை நிறத்திலும்,  மார்பில் உள்ள இறகுகள்  வெண்மை நிறத்திலும் உடம்பில் உள்ள இறகுகள் கருமை நிறத்திலும் காணப்படும். இது உயரமான மரத்தில் கூடுகட்டி வாழும் . இறந்து போன விலங்குகளின் கடினமான தோலை தன்னுடைய அழகால் குத்தி கிழிக்கும் வகையில் வலுவான அழகுடன் காணப்படும் . இதுவும் தற்போது அழியும் நிலையில் உள்ளது , தமிழகத்தில் 12 கழுகு மட்டுமே எஞ்சி உள்ளது .

3)வெண்முதுகுப் பாறு White rumped vulture :

கருத்த உடலும் முதுகுப்பகுதியில் வெள்ளை நிறமும் கொண்டு காணப்படும் இவை பறக்கும் போது முதுகுப்பகுதியில் உள்ள வெள்ளை நிறம் தெளிவாக தெரியும் . கூர்மையான அலகு மிகவும் அழிவு நிலையில் காணப்படும் இக்கழுக்கானது சுமார் 160 மட்டுமே தமிழகத்தில் காணப்படுகிறது .

4)கருங்கழுத்துப் பாறு long billed vulture Indian vulture

இதன் தலைப் பகுதியும் கழுத்துப் பகுதியும் கருமை நிறத்திலும் உடற் பகுதி வெளிர் சாம்பல் நிறத்திலும் காணப்படும்.

தமிழகம் எங்கும் காணப்பட்ட பாறு கழுகுகள் தற்போது பார்ப்பதே அரிதாகி விட்டது . இப்படியான பேரழிவுக்கான  காரணங்களை காண்போம் . நோய்வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது அவற்றுக்கு கொடுக்கப்படும் வலிப்போக்கி மருந்துகளில் கலந்துள்ள டைக்குளோபினாக், அசிக்குளோபினாக், புளூநிக்சின், நிமிசுலாய்ட்ஸ் ,கீட்டோபுரோபேன் ஆகிய மருந்துகள் கால்நடைகளின் உடல் நலத்திற்கு பலனளிக்காமல்  அவை இறந்த நேரிடுகிறது . இறந்த கால்நடைகளை ஊருக்கு ஒதுக்குப்புறமான போடப்பட்டு அதனை இக்கழுகுகள் உண்பதால் அவற்றிக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு அவை இறக்கின்றன . அதுமட்டுமின்றி சிறுத்தைக்கு அஞ்சி இறந்த கால்நடைகளின் மீதும் நஞ்சு பூசுவதாலும் எதிர்பாராமல் இவை இறக்க நேரிடுகிறது . இவை மட்டுமல்லாமல் காட்டுத்தீ , காடழிப்பு , முக்கியமாக இப்பறவை கூடு கட்டும் நீர்மருது மரம் அழிப்பு இப்படியான பல காரணங்களால்  இவற்றின் பேரழிவுக்கு நாமே காரணம் என்பதை நாம் உணர வேண்டும் . கால்நடைகளுக்கு கொடுக்கப்படும் மருந்துகளுக்கு மாற்றாக மெலாக்சிகம், டோல்பினாமிக் ஆசிட், சித்த, ஆயுர்வேதா, ஹோமியோ மருந்துகளைப் பயன்படுத்தவேண்டும் . காட்டுக்கு அருகில் வசிப்பவர்கள் இறந்த கால்நடைகளை புதைக்காமல் அதனை கழுகளுக்கு உணவாக வழங்க வேண்டும் . உணவுச் சங்கிலியில் முக்கிய பங்கு வகிக்கின்ற இப்பாறு கழுகுகளை பாதுகாப்பது நம் கடமை ஆகும் . இவற்றை காக்க தமிழக அரசுடன் இணைந்து தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கும் அருளகம் அமைப்பின் பாரதிதாசன் ஐயா அவர்களுக்கும் , சுந்தரி, ரேவதி, சந்தோஷ் மற்றும் ஏனையோருக்கும் எனது அன்பும் நன்றியும் .