முகலாய பேரரசர் அக்பர்(Akbar ) தனது ஆட்சிப்பகுதியை விரிவுபடுத்திய போது (வட இந்தியாவை ) பெரும் இடையூராகவும் , வீரமிக்க எதிராளிகளாகவும் விளங்கியவர்கள் ராஜபுத்திர வம்சத்தினர்கள் . ராஜபுத்திர மன்னர்களில் இரண்டாம் உதய் சிங்கும் அவர் மகன் மஹாராணா பிரதாப் சிங்கும் அக்பருக்கு கட்டுப்பட மறுத்த பெரும் வீரர்கள் . கி பி 15ம் நூற்றாண்டில் ராஜபுத்திர வம்சத்தில் தோன்றிய இரண்டாம் உதய்சிங் சித்தொகரை (Chittogarh ) தலைநகராக கொண்டு மேவாரை ( Mewar ) ஆட்சி செய்து வந்தார் . மேவார் பகுதி என்பது இன்றைய ராஜஸ்தானின் ஒரு பகுதியாகும் . முகலாய பேரரசர் அக்பர் 1567 ஆம் ஆண்டு தனக்கு கட்டுப்பட மறுத்த சித்தோகர் கோட்டையை முற்றுகையிட்டார் . மிகப் பெரிய கோட்டை மற்றும் ராஜபுத்திரர்களின் வீரத்தாலும் இப்போர் சுமார் நான்கு மாதங்கள் ( 23 October 1567 – 23 February 1568) நடந்தது , இறுதியில் அக்பர் சித்தோகர் (chittogarh) கோட்டையை கைப்பற்றினார் . இப்போரில் உதய் சிங் உயிர்தப்பியதோடு ஆரவல்லி மலைப் பகுதிக்கு தப்பினார் . மேவாரின் தலைநகர் சித்தோகர் கைப்பற்றப்பட்ட போதிலும் இந்த ராஜ்யத்தின் பெரும்பகுதி உதய் சிங்கின் ஆதிக்கத்தில் இருந்தது . எனவே தலைநகரை இழந்த உதய் சிங் புதிய தலைநகரை உருவாக்கினார் . அவர் பெயரில் உருவாக்கப்பட்ட தலைநகரே இன்றைய உதய்பூர் ( Udaipur ) . நீர் மேலாண்மையின் முக்கியத்துவத்தை உணர்த்த உதய் சிங் நகர் முழுவதும் பல ஏரிகளை உருவாக்கினார் . இன்றும் பல ஏரிகளை கொண்டு இந்நகரம் விளங்குவதால் ஏரிகள் நகரம் ( City Of Lakes ) என்று இன்றும் புகழ்ப்படுகிறது . இரண்டாம் உதய் சிங்கின் மறைவுக்கு பின் அவர் மகன் மஹாராணா பிரதாப் சிங் ஆட்சிக்கு வந்தார் . இவர் 1540 ம் ஆண்டு மே 9ம் தேதி ராஜஸ்தானின் கும்பல்கரில் ( Kumbhalgarh / Kumbhalmer ) பிறந்தவர் . இவரின் தலைமையில் மேவார் சிறப்புற்று விளங்கிய போது அக்பர் மீண்டும் மேவாரை பிடிக்க படையெடுத்தார் . ஜூன் 18ம் தேதி 1576 ம் ஆண்டு அம்பரை சேர்ந்த மான் சிங்( Man Singh Of Amber ) என்பவர் தலைமையில் அக்பரின் படை கிளம்பியது . அரவல்லி ( Aravalli )மலைத்தொடரில் இருந்து 40 km தொலைவில் அமைந்த உதய்பூரை பிடிக்க ஹால்டிகட் (Haldighati ) என்னும் மலையில் உள்ள கணவாய் வழியாக படை வந்தது . இம்மலை முழுவதும் மஞ்சள் நிற மண் காணப்படுவதால் , ( haldi ) ஹால்டி என்றால் இந்தியில் மஞ்சள் என்ற பொருளில் ஹால்டிகாட் என்று இம்மலை அழைக்கப்படுகிறது . அக்பரின் பெரும் படையை மஹரானா பிரதாப் சிங்கின் சிறிய படை வீரத்தோடு எதிர்கொண்டது . ராணா பிரதாப் சிங்கின் மிகப்பெரிய பலமாக கருதப்பட்டது அவரது சேடக் ( CHETAK ) குதிரை . மார்வாரி குதிரை இனத்தை சேர்த்த சேடக் குதிரை அழகு , திறமை மற்றும் புத்திசாலித்தனம் ஆகியவற்றை ஒருங்கே கொண்டு இருந்தது . இப்போரில் முகலாய படைத்தளபதியான மான் சிங்கை கொல்ல ராணா முயன்ற போது ராணா படுகாயமுற்றார் . அவரது சேடக் குதிரையும் காலில் காயமுற்றது எனினும் தன் தலைவர் காயமுற்று சுயநினைவு இழந்த நிலையில் அவரை சுமந்து கொண்டு போர் களத்தை விட்டு பகைவர்களிடமும் சிக்காமல் ஓடி , ஆற்றை கடந்து அவரை கொண்டு சேர்த்துவிட்டு கீழே விழுந்து மடிந்து இறந்தது . சரியான நேரத்தில் ராணா பிரதாப்பை மீட்டு , அவர் உயிரை பகைவரிடம் இருந்து காப்பாற்றியது . தன் வலியை பொருட்படுத்தாமல் காயப்பட்ட கால்களுடன் ஓடி தன் எஜமானை காப்பாற்றிய நிம்மதியுடன் இறந்தது . சுமார் 4 மணி நேரமே போர் நடத்தி அக்பர் வென்றாலும் , அவர் இப்போரில் முழுவெற்றி அடையாத்ததற்கு சேடக் குதிரையே காரணம் . அன்றில் இருந்து இக்குதிரை பற்றி பல நாட்டுப்புற கதைகள் உலவுகின்றன . பல நூற்றாண்டுகளாக சேடக் குதிரை கதைகளின் நாயகனான திகழ்கிறது . ராணா பிரதாப் சிங் , தன் உயிரை காப்பாற்றிய சேடக் குதிரையை புதைத்த இடத்தில் ஒரு நினைவுச் சின்னம் (நவீன நடுகல் ) எழுப்பியுள்ளார் . சேடக்கை புதைத்த இடத்தில் சிறு மேடை அமைத்து அதன் மேல் மண்டபம் போல் அழகான மாடம் அமைத்துள்ளனர் . அதன் நடுவே ஒரு அடிக்கு, நான்கு புறம் கொண்ட சிறு கல் தூண் அமைத்து, ஓவ்வொரு பக்கத்திலும் சிறு சிற்பம் அமைத்துள்ளனர் . இச்சின்னமும் , ஹால்டிஹட் போர் நடத்த இடமும் தற்போது ராஜஸ்தான் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது . இக்குதிரையின் வீரமும் விசுவாசமும் புத்திசாலித்தனமும் இன்றும் போற்றப்படுகிறது . இக்குதிரையின் நினைவில் நம் இந்திய அரசாங்கம் ராணுவ வானூர்திக்கு சேடக் ஹெலிகாப்டர் ( Chetak Helicopter ) என்றும் , ஒரு தனியார் நிறுவனம் தன் இரு சக்கர வாகனத்திற்கு (Chetak Scooter ) சேடக் ஸ்கூட்டர் என்றும் பெயர் வைத்து மரியாதை செய்துள்ளது . ராணா பிரதாப் சிங், ஹல்டிகட் போர் நடந்து சில ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அக்பர் கைப்பற்றிய சித்தோகர் கோட்டை மற்றும் பிற பகுதிகளை கைப்பற்றினார் . இவர் ஆட்சியில் மேவார் ராஜ்ஜியம் சிறப்புற்று விளங்கியது .
ஜனவரி 19ம் தேதி 1597ம் ஆண்டு ராணா மறைந்தாலும் அவரையும் அவரின் சேடக் குதிரையையும் உதய்பூர் மக்கள் மறக்கவில்லை . ராஜபுத்திர மன்னர்கள் பல பேர் இருந்தாலும் வரலாற்றில் இன்றளவும் ராணா பிரதாப் சிங்கிற்கு தனியிடம் உண்டு . உதய்ப்பூர் சாலை நடுவே சேடக் குதிரையும் சிற்பம் வைக்கப்பட்டுள்ளது . இன்றும் ராணாவின் மன உறுதியையும் முகலாயர்களுக்கு அடிபணியாத வீரத்தையும் மறக்காத மக்கள் அவரின் பிறந்தநாளை அரசு விடுமுறையாக அறிவித்து கொண்டாடி வருகின்றனர் .தங்கள் குழந்தைகளுக்கு பிரதாப் என்று இன்றும் பெயர் சூட்டி , அவரைப் பற்றி பல கதைகள் பேசி மகிழ்கின்றனர் . மேலும் மஹாரானா பற்றி அறிந்துகொள்ள அருங்காட்சியகம் அமைத்து அதில் அவரின் வாழ்க்கை வரலாறு சொல்லும் ஓவியக்காட்சியும் , ஒளி ஒலி காட்சியும் , அவர் பயன்படுத்தி பொருட்களும் வைக்கப்பட்டுள்ளது . இங்கு அவரைப்போன்றும் , அவர் சேடக் குதிரைமேல் அமர்ந்து முகலாயர்களிடம் சண்டை போடும் காட்சிகள் அனைத்தும் பெரிய சிலைகளாக அமைத்துள்ளனர் . நாம் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய வீர வரலாறு இது .
CHATAK HORSE
CHATAK SAMADHI
HALDIGHAT
MAHARANA PRATAB MUSEUM